வேதத்தில் முதன் முதலில்
பேசப்படும் கருத்து “புருஷார்த்தம்” ஆகும். “புருஷன்” என்றால் “மனிதன்”.
“அர்த்தம்” என்றால் “ இலட்சியம்” அல்லது “இலக்கு” என்று பொருள். மனிதனுக்கு இருக்க
வேண்டிய இலட்சியம் “புருஷார்த்தம்” ஆகும்.
சரி, மனிதனுக்கு ஏன்
இலட்சியம் இருக்கவேண்டும்? இவ்வுலகில் பலவிதமான
ஜீவராசிகள் இருக்கின்றன. இதில் மனிதனுக்கு மட்டும்தான் தேர்வு செய்யக்கூடிய
வாய்ப்பு இருக்கிறது. மற்ற ஜீவராசிகளுக்கு தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இல்லை.
தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும்போது தானாக இலட்சியம் அல்லது குறிக்கோள்
வந்துவிடுகிறது. எப்படியென்றால் தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால்தான் நாம்
நமக்கு பிடித்த அல்லது தேவையானவற்றை தேர்வு செய்கிறோம். உதாரணமாக நாம் இந்தத்துறைதான்
நான் சாதிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறோம், அதே துறையிலும் நாம் முன்னேறி
சாதிக்கின்றோம். ஆனால் சிலவற்றில் நமக்கு தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இல்லை.
உதாரணமாக நம்முடைய நிறத்தை, தாய்-தந்தையரை தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இல்லை.
இதில் இந்த தாய்—தந்தையருக்கு பிறப்பதுதான் என் இலட்சியம் என்றெல்லாம்
கூறமுடியாது. ஆகையால் தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும்போதுதான் இலட்சியம்
என்பது வருகிறது.
நான்கு வகை
“புருஷார்த்தம்” (இலட்சியம்)
மனிதனுக்கு இருக்க வேண்டிய
இலட்சியம் “புருஷார்த்தம்” எனபார்தோம். சாஸ்திரம் நான்கு வகையான புருஷார்த்தத்தை
கூறுகிறது.
அது சமஸ்கிருதத்தில் “தர்மார்த்தகாமமோக்ஷம்”
(தர்மம்,அர்த்தம்,காமம்,மோக்ஷம்) எனப்படும். நம்முடைய தமிழ் மொழியில் “அறம்,பொருள்,இன்பம்,வீடு”
எனப்படும்.
வேதத்தில் பேசப்பட்டுள்ளக் கருத்துக்கள் :
வேதமானது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் முக்கால் பாகம்
ஒரு பகுதியாகவும் மீதமுள்ள கால்பாகம் ஒரு பகுதியாகவும் உள்ளது. முதல் பகுதி “கர்மகாண்டம்”
எனவும், கடைசி பகுதி “ஞானகாண்டம்” எனவும் அழைக்கப்படுகிறது. வேதத்தினுடைய
கடைசியில் வருகிற ஞானகாண்டம் “வேதாந்தம்” என்றழைக்கப்படுகிறது. “வேதாந்தம்”
என்றால் வேதத்தினுடைய அந்தத்தில் (அந்தம் என்றால் கடைசி என்று பொருள்) வருவதால்
அப்பெயர் வந்துள்ளது.
மேலும் அடுத்த இடுக்கையில்
சிந்திப்போம்.





