“மோக்ஷம்” – தலைப்பைப் பார்த்ததும் இது நமக்கு சம்பந்தம் இல்லாத இடம், இந்த வலைதளத்தில் உள்ள கருத்துக்களைப் படித்தால் நாம் சன்யாசி ஆகிவிடுவோம் என நீங்கள் எண்ணலாம் அல்லது மோக்ஷம் இறந்ததற்கு பிறகு அடையவேண்டியது என நீங்கள் என்னலாம்.இப்போது “மோக்ஷத்தைப் பற்றிய விளக்கம் கட்டாயம் தேவைப்படுகிறது. “மோக்ஷம்” என்றால் என்ன? என சுருக்கமாகப் பார்ப்போம்.
“மோக்ஷம்” என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் அடையவேண்டியதோ அல்லது குறிப்பிட்ட தேசத்தில் அடையவேண்டியதோ அல்லது கடுமையான தவம் செய்து அடையவேண்டியதோ அல்லது இல்லற வாழ்க்கையை துறந்து அடையவேண்டியதோ அல்லது இறந்தப்பிறகு வேறொரு லோகத்தில் அடையவேண்டியதோ அல்ல. நாம் உயிருடன் இருக்கும்போதே அடையவேண்டிய மேலான நிலையாகும்.
மோக்ஷத்திற்கு வேதங்கள் எளிமையாக பல கோணங்களில் விளக்கமளிக்கிறது. “மோக்ஷம்” என்றால் “முழுமையான மனநிறைவை அடைவது மோக்ஷம்” எனலாம். இதையே எதிர்மறையாக கூறினால் “மனதில் உள்ள துக்கத்தை நீக்குவது மோக்ஷம்” எனலாம் அல்லது ஆனந்த சொரூபியாக உள்ள இறைவனை அடைவதால் “ஆனந்தத்தை அடைவது மோக்ஷம்” எனலாம் அல்லது “பிரம்மத்தை அடைவது மோக்ஷம்” எனலாம். இவ்வாறு மோக்ஷத்திற்கு பல விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. நாம் எளிதில் புரிந்துகொள்ள “முழுமையான மனநிறைவை அடைவது மோக்ஷம்” என எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் நாம் பலக்கருத்துக்களை சிந்தித்துவிட்டு மோக்ஷத்தைப்பற்றி விரிவாக சிந்திக்கலாம். எனவே மோக்ஷத்தைப்பற்றிய தவறான எண்ணங்களை விட்டுவிட்டு அடையவேண்டிய மேலான நிலையை அடைவதற்கு முயற்சி செய்வோமாக.
அடுத்த இடுக்கையில் மேலும் சிந்திக்கலாம்.
