Friday, December 28, 2012

புருஷார்த்தம் :




வேதத்தில் முதன் முதலில் பேசப்படும் கருத்து “புருஷார்த்தம்” ஆகும். “புருஷன்” என்றால் “மனிதன்”. “அர்த்தம்” என்றால் “ இலட்சியம்” அல்லது “இலக்கு” என்று பொருள். மனிதனுக்கு இருக்க வேண்டிய இலட்சியம் “புருஷார்த்தம்” ஆகும்.

சரி, மனிதனுக்கு ஏன் இலட்சியம் இருக்கவேண்டும்? இவ்வுலகில் பலவிதமான ஜீவராசிகள் இருக்கின்றன. இதில் மனிதனுக்கு மட்டும்தான் தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. மற்ற ஜீவராசிகளுக்கு தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இல்லை. தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும்போது தானாக இலட்சியம் அல்லது குறிக்கோள் வந்துவிடுகிறது. எப்படியென்றால் தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால்தான் நாம் நமக்கு பிடித்த அல்லது தேவையானவற்றை தேர்வு செய்கிறோம். உதாரணமாக நாம் இந்தத்துறைதான் நான் சாதிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறோம், அதே துறையிலும் நாம் முன்னேறி சாதிக்கின்றோம். ஆனால் சிலவற்றில் நமக்கு தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இல்லை. உதாரணமாக நம்முடைய நிறத்தை, தாய்-தந்தையரை தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இல்லை. இதில் இந்த தாய்—தந்தையருக்கு பிறப்பதுதான் என் இலட்சியம் என்றெல்லாம் கூறமுடியாது. ஆகையால் தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும்போதுதான் இலட்சியம் என்பது வருகிறது.

நான்கு வகை “புருஷார்த்தம்” (இலட்சியம்)

மனிதனுக்கு இருக்க வேண்டிய இலட்சியம் “புருஷார்த்தம்” எனபார்தோம். சாஸ்திரம் நான்கு வகையான புருஷார்த்தத்தை கூறுகிறது.
அது சமஸ்கிருதத்தில்  “தர்மார்த்தகாமமோக்ஷம்” (தர்மம்,அர்த்தம்,காமம்,மோக்ஷம்) எனப்படும். நம்முடைய தமிழ் மொழியில் “அறம்,பொருள்,இன்பம்,வீடு” எனப்படும்.

வேதத்தில் பேசப்பட்டுள்ளக் கருத்துக்கள் :

வேதமானது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் முக்கால் பாகம் ஒரு பகுதியாகவும் மீதமுள்ள கால்பாகம் ஒரு பகுதியாகவும் உள்ளது. முதல் பகுதி “கர்மகாண்டம்” எனவும், கடைசி பகுதி “ஞானகாண்டம்” எனவும் அழைக்கப்படுகிறது. வேதத்தினுடைய கடைசியில் வருகிற ஞானகாண்டம் “வேதாந்தம்” என்றழைக்கப்படுகிறது. “வேதாந்தம்” என்றால் வேதத்தினுடைய அந்தத்தில் (அந்தம் என்றால் கடைசி என்று பொருள்) வருவதால் அப்பெயர் வந்துள்ளது.


மேலும் அடுத்த இடுக்கையில் சிந்திப்போம்.

சாஸ்திரம்





சாஸ்திரம் என்றால் என்ன?
சாஸ்திரம் என்பது ஒரு நூல். வேதம் என்பது ஒரு சாஸ்திரம். இந்த சாஸ்திரமானது ஆதி காலத்தில் தெய்வத்தினடத்தில் இருந்து குரு சிஷ்ய பரம்பரையாக வந்துள்ளது. குரு சாஸ்திரத்தை உபதேசிக்க சிஷ்யனானவன் அதனை மனதில் கிரஹித்துக்கொண்டான். இப்படியாக காது வழியாக கேட்கப்பட்டு காப்பாற்றப்பட்டு வந்தது. சாஸ்திரமானது ஒலி வடிவமாக இருந்ததினால் “ஸ்ருதி” என்றழைக்கப்படுகிறது. குருவிடமிருந்து இந்த சாஸ்திரத்தை கிரஹித்துக்கொண்ட ரிஷிகள் அவரவர்கள் மொழியில் வேதத்தின் கருத்தை மாற்றாமல் எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த சாஸ்திரத்திற்கு “ஸ்மிருதி” என்று பெயர். சாஸ்திரத்தின் கருத்துக்கள் மாறாமல் கதைகளின் மூலம் தெரியப்படுத்தினால் அதற்கு “புராணங்கள்” என்று பெயர். உண்மை சம்பவங்கள் மூலமாக சாஸ்திரத்தின் கருத்துக்களைக் கூறினால் அதற்கு “இதிகாசங்கள்” என்று பெயர்.

“ஒரு முக்கிய பலனுக்காக உருவாக்கப்பட்டு அந்த முக்கிய பலனை அடைவதற்கான அனைத்து அறிவையும் கொடுப்பது சாஸ்திரம் எனப்படும்.”

நம்மிடம் பலவிதமான சாஸ்திரங்கள் இருக்கின்றன. அதில் வேதம் “ரிக், யஜுர், சாமம், அதர்வணம்” என்ற நான்கு பகுதிகளாக நாம் அறிந்துள்ளோம். வேதத்திற்கு நாம் சாஸ்திரம் என்ற தன்மையை கொடுத்துவிட்டால், வேதமானது நாம் சாஸ்திரத்துக்கு கொடுத்த இலக்கணப்படி இருக்கவேண்டும். அதாவது ஒரு முக்கிய பலனுக்காக அது உருவாக்கப்பட்டு அந்த முக்கிய பலனை அடைவதற்கு எவைகள் எல்லாம் தேவையோ அவைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். வேதமானது மனிதப் பிறவியின் முக்கியமான நோக்கத்தை (மோக்ஷம்) இங்கே முக்கிய பலனாக எடுத்துரைத்து அதை அடைய என்னென்ன வழிகளை பின்பற்ற வேண்டும் என்பதை நமக்கு தெளிவாக எடுத்துரைக்கிறது.
வேதத்தில் என்னென்ன கருத்துக்கள் பேசப்பட்டுள்ளன என்பதை அடுத்த இடுக்கையில் சிந்திப்போம்.

ஸ்ரீ ஆச்சாரியாள் அருளுரை



தட்சிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதிதீர்த்த மஹாஸ்வாமிகள்

ஸ்ரீ ஆச்சாரியாள் அருளுரை

மனுஷ்ய ஜென்மம் சுலபமாகக் கிடைக்கக்கூடியது அல்ல. மிகவும் புண்ணியம் செய்திருந்தால்தான்  இது கிடைக்கும். இந்த ஜன்மாவை முக்திக்கு பயன்படுத்திக்கொள்பவன் தான் விவேகி.இந்த ஜன்மம் போனால் பிறகு எந்தப் பிறவி வருமோ தெரியாது. மனிதப் பிறவி இல்லாமல் வேறு எந்தப்பிறவி எடுத்தாலும் அதில் நாம் ஒன்றும் சாதிக்கமுடியாது. என்ன சாதிக்கவேண்டும் என்றாலும் அதை இந்த மனிதப் பிறவியில்தான் செய்யவேண்டும். ஆகவே இந்த மனிதப்பிறவியில் ஒரு க்ஷணநேரங்கூட வீணாக்கக்கூடாது. பகவானுடைய சிந்தனை, ஸத் புருஷர்களுடைய முக்தி  சௌக்கியத்திற்கு சோபானங்கள். இவற்றைவிட்டு எந்த விஷயத்தில் ஈடுப்பட்டாலும் ஆயுஸ் வ்யர்த்தம் (ஜென்மங்கள்) ஆகுமே தவிர, ப்ரயோஜனம் இருக்காது.

மஹதா புண்ய பண்யேன க்ரீதேயம் காயதெளஸ்த்வயா
பாரம் து:கோததேர்கந்தும் தர யாவன்னபித்யதே

உன்னால் மிகுந்த புண்ணியக் கூட்டங்களால் விலைக்கு வாங்கப்பட்டதே இந்த சரீரமாகிய தோணி, துன்பங்கள் நிறைந்த இந்த (ஸம்சாரமாகிய) கடலைக் கடந்து மறு கரையை அடைவதற்கு, இந்த  
சரீரமாகிய தோணியில் துளை விழுந்து உடைந்து போவதற்கு முன்பாகவே சரியாக உபயோகித்து  (கடலை) கடந்துவிடு. 

இந்த விஷயத்தை நன்றாக அறிந்து கொண்டு, அதேபோல் நடந்து எல்லோரும் ஸ்ரேயஸ்சை அடையட்டும்.

அம்மன் தரிசனம் - நவம்பர்,2006