Thursday, November 10, 2011

மனிதப்பிறவியின் பெருமை:

இவ்வுலகில் நாம் லட்சக்கணக்கான ஜீவராசிகளைப் பார்க்கிறோம். ஒவ்வொரு ஜீவராசிகளுக்குள்ளேயும் எண்ணற்ற பேதங்களைப் பார்க்கிறோம். மனிதன் மற்ற ஜீவராசிகளை விட மேலானவன் என்று எப்படி கருதப்படுகிறது?
மனிதனுக்கு மட்டும்தான் “பகுத்தறிவு” என்ற சிறப்பான அறிவு இருக்கிறது. சில ஜீவராசிகள் ஐந்தறிவே உடயவனவாகவும், சில ஜீவராசிகள் அதைவிட சொற்ப அறிவே உடயவனவாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. மனிதன் “பகுத்தறிவு” என்ற சிறப்பான அறிவைப் பயன்படுத்தி தமக்குத் தேவையானவற்றை தானே உருவாக்கி சுகமாக வாழ்கிறான். எது சிறந்தது? எது சிறந்தது அல்ல? எனவும், எதை செய்தால் தமக்கு நன்மை ஏற்படும்? எதை செய்தால் தமக்கு தீமை வந்து சேரும் என சிந்தித்து செயல்படுகிறான்.சூழ்நிலைக்கேற்ப  தம்முடைய சுபாவத்தை மாற்றிக் கொள்கிறான். ஆனால் மற்ற ஜீவராசிகள் அவ்வாறு நினைத்த மாத்திரத்தில் தம்முடைய சுபாவத்தை மாற்றிக்கொள்ளமுடியாது.உதாரணமாக ஒரு நாயோ அல்லது ஒரு யானையோ தம்முடைய சுபாவத்தை தாம் நினைத்தப்படி மாற்றிக்கொள்ளமுடியாது. அதனால்தான் மனிதன் அந்தந்த ஜீவராசிகளின் சுபாவத்தை அறிந்து, நூறு மனிதர்களின் வலிமையைவிட அதிக பலமுடைய ஜீவராசிகளை தம் புத்திக்கூர்மையால் அடக்கியாளும் சக்திப் படைத்தவனாக  இருக்கிறான்.
சரி, மோக்ஷத்திற்கும் மனிதப்பிறவிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என கேட்டால்,
மனிதனால் மட்டும்தான் தன் நிலையிலிருந்து கீழ் சென்று மிருகமாகவும், தன் நிலையிலிருந்து மேல் சென்று தெய்வமாகவும் மாறமுடியும் என சாஸ்திரம் சொல்கிறது. அதாவது, செய்யக்கூடாத செயல்களை செய்து பாபத்தை சேர்த்திக் கொண்டால் மிருகப்பிறவியையும், சாஸ்திரத்தில்  கூறியுள்ளபடி தர்மப்படி வாழ்ந்து கர்மயோகம்,பக்தியோகம்,ஞானயோகம் முதலிய சாதனையை செய்தால், மனிதன் தெய்வமாகவும் மாறலாம் என சாஸ்திரம் சொல்கிறது. மனிதனை தவிர எந்த ஜீவராசியும் இந்த சாதனைகளை செய்யமுடியாது. எனவே, மனிதப்பிறவியில் மட்டும்தான் நாம் அடைவதர்கரிய “மோக்ஷத்தை” அடையமுடியம்.
மேலும் சாஸ்திரத்தைப் பற்றிய கருத்துக்களை அடுத்த இடுக்கையில் சிந்திப்போம்.

Wednesday, November 9, 2011

மற்ற ஜீவராசிகளுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு:


இறைவன் இவ்வுலகை படைக்கும் போது  தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன,மிருகம்,மனிதன்,தேவர்கள் என ஏழுவகையான பேதங்களுடைய ஜீவராசிகளைப் படைத்துள்ளார். ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளேயே நாம் அநேக பேதங்களைக் காண்கிறோம்.ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒவ்வொரு குணத்தை இறைவன் கொடுத்துள்ளார்.
உதாரணமாக நாம் அன்றாட வாழ்க்கையில் வெவ்வேறு பயன்பாட்டிற்கு வெவ்வேறு விதமான கீரைகளைப் (அதாவது தாவரங்களை) பயன்படுத்துகிறோம். அதேபோல நாய்க்கு ஒருவிதமான தன்மை, யானைக்கு ஒருவிதமான தன்மை, நரிக்கு ஒருவிதமான தன்மை, இப்படி ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒவ்வொரு குணத்தை இறைவன் கொடுத்துள்ளார். ஆனால் மற்ற ஜீவராசிகள் தம்முடைய உணவை தேடிக்கொள்வதர்க்கும், தன்னைக் காத்துக்கொள்ள மட்டுமே அதனால் முடியும், ஆனால் மனிதனுக்கு இறைவன் சிந்திக்கக்கூடிய தன்மையையும், தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும், எது சரி, எது தவறு என சிந்தித்து செயல்படக்கூடிய வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.
கூர்ந்து கவனித்தால் மற்ற ஜீவராசிகள் தம்முடைய குணத்தை தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியாது. மனிதன் மட்டும்தான் தன்னுடைய குணத்தை மாற்றிக்கொள்ளமுடியும்.எனவேதான் நம முன்னோர்கள் “மானிடராய் பிறத்தல் அரிது” என கூறியுள்ளார்கள். எனவே நம்முடைய மனிதப்பிறவினுடைய மேன்மையை அறிந்து எந்த லட்சியத்திற்காக இம்மனிதப்பிறவியை எடுத்தோமோ அந்த லட்சியத்தை அடைவதற்க்காக முயற்சிப்போம்.
மேலும் மனிதப்பிறவியின் பெருமையைப் பற்றி அடுத்த இடுக்கையில் சிந்திப்போம்.